பா.ஜ., உடன் பி.ஆர்.எஸ்., கட்சியை இணைக்க சதி நடக்கிறது: சந்திரசேகர ராவ் மகள் தகவல்
பா.ஜ., உடன் பி.ஆர்.எஸ்., கட்சியை இணைக்க சதி நடக்கிறது: சந்திரசேகர ராவ் மகள் தகவல்
ADDED : மே 29, 2025 11:51 PM

ஹைதராபாத்: பா.ஜ., உடன் பி.ஆர்.எஸ்., கட்சியை இணைக்க சதி நடப்பதாக, அக்கட்சி தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த பி.ஆர்.எஸ் எனப்படும் பாரத் ராஷ்டிர சமிதி, கடந்த சட்டசபை தேர்தலில் தோற்று ஆட்சியை பறி கொடுத்தது.
குழப்பம்
லோக்சபா தேர்தலிலும் தோல்வி ஏற்பட்டதால், கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் குடும்பத்துக்குள் குழப்பம் நிலவுகிறது.
பா.ஜ., உடன் நெருங்கு வதாக தகவல்கள் பரவும் சூழலில், கட்சியின் வெள்ளி விழா கூட்டத்தில் அது பற்றி எதுவுமே சந்திரசேகர ராவ் கூறாததால், அவரது மகள் கவிதா, பகிரங்க கடிதம் ஒன்றை எழுதி, சந்திரசேகர ராவை சாத்தான்கள் சூழ்ந்திருப்பதாக விமர்சித்தார்.
பி.ஆர்.எஸ்., செயல் தலைவரான தன் சகோதரர் ராமாராவுக்கு எதிராகவும் போர்க்கொடி துாக்கியுள்ளார். டில்லி மதுபான ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் பா.ஜ., மீது கவிதா கடும் கோபத்தில் இருக்கிறார். இந்நிலையில், தங்கள் கட்சியை பா.ஜ., உடன் இணைக்க சதி நடப்பதாக நேற்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
கவிதா அளித்த பேட்டி:
பா.ஜ., உடன் பி.ஆர்.எஸ்., கட்சியை இணைக்கும் சதித்திட்டம், நான் சிறையில் இருந்தபோதே துவங்கி விட்டது. இரு கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
ராஜினாமா
நான் சிறையிலேயே இருக்கிறேன்; கட்சியை இணைக்க வேண்டாம் என தடுத்தேன். என் எம்.எல்.சி., பதவியை கூட ராஜினாமா செய்ய தயாராக இருந்தேன். சிறையில் இருந்தபோது, எனக்கு எதிராகவும் கட்சிக்குள் சிலர் செயல்பட்டனர்.
கட்சியின் ஐ.டி., பிரிவு வாயிலாக, என் மீது அவதுாறு பரப்பப்படுகிறது. எதிலும் பின்வாங்க மாட்டேன்; கட்சிக்குள் என் போராட்டம் தொடரும். பி.ஆர்.எஸ்., தலைவராக என் தந்தை சந்திரசேகர ராவை தவிர வேறு யாரையும் ஏற்க முடியாது.
காங்.,கில் சேர, மறைமுகமாக நான் பேசுவதாகவும், தனிக்கட்சி துவங்கப் போவதாகவும் தகவல்களை பரப்புகின்றனர்.
இவ்வாறு கவிதா கூறினார்.