மருத்துவமனையில் ஹெராயின் விற்ற கான்ஸ்டபிள் சிக்கினார்
மருத்துவமனையில் ஹெராயின் விற்ற கான்ஸ்டபிள் சிக்கினார்
ADDED : நவ 13, 2024 11:42 PM
ஜம்மு : ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் போதைப்பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதன்படி, மருத்துவமனை வளாகங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, மருத்துவமனையின் சவக்கிடங்கு அருகே தன் பைக்குடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை போலீசார் சோதனையிட்டனர்.
அவரிடம் இருந்து ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 9,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அந்த நபரின் பெயர் முகமது முக்தியார் என்றும், அவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றுவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இவர், ஸ்ரீநகரின் ஜிவான் பகுதியின் 12வது பட்டாலியன் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். தற்போது 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட எஸ்.பி., பிரிஜேஷ் சர்மா கூறுகையில், ''ஜம்மு பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலில் முகமது முக்தியார் இருந்துள்ளதாக சந்தேகிக்கிறோம்.
''எனவே, போதைப்பொருள் விற்பனை வாயிலாக அவர் வாங்கிய சொத்துகளை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதை, உறுதிப்படுத்திய பின் அவற்றை முடக்குவோம்,'' என்றார்.
இதேபோல் கடந்த 7ம் தேதி, ஜம்மு - காஷ்மீரில் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 2.5 லட்சம் ரூபாயுடன் கான்ஸ்டபிள் பர்வாயிஸ் கான் மற்றும் அவரது இரண்டு மனைவிகளை போலீசார் கைது செய்தனர்.

