ADDED : மார் 05, 2024 07:16 AM
புதுடில்லி : தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருவருக்கும் மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பதவி இழந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, பொன்முடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியின் உடல்நலனை கருத்தில் வைத்து, சரண் அடைவதில் இருந்து தற்காலிக விலக்கு அளித்தது.
இந்த வழக்கு ஜன., 29ல் விசாரணைக்கு வந்தபோது, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விசாரணை நடத்தாமல் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
இந்நிலையில், நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இதே போன்ற மூன்று வழக்குகளில் மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வழக்கு விசாரணை முடியும்வரை அவரது தொகுதி பிரதிநிதியின்றி இருப்பதை சுட்டிக்காட்டினார்.
அடுத்த விசாரணையின் போது, நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விளக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 18க்கு ஒத்திவைத்தனர்.

