ADDED : ஜன 08, 2024 10:56 PM

பெங்களூரு: பெங்களூரு அரண்மனை மைதானத்தில், பிப்., 24, 25ம் தேதிகளில், அரசியலமைப்பு மற்றும் ஒருமைப்பாடு மாநாடு நடத்த முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முதல்வரின் அலுவலகமான கிருஷ்ணாவில் நேற்று முக்கிய கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, பெங்களூரில் உள்ள இந்திய பல்கலைக்கழகத்தின் ஐ.எஸ்.இ.சி., என்ற தேசிய சட்டப் பள்ளியின் சமூக மற்றும் பொருளாதார மாற்ற நிறுவனத்துடன் இணைந்து, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் பிப்ரவரி 24, 25ம் தேதிகளில் 'அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு' நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில், அரசியல் அமைப்பின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய ஒற்றுமையை நிலைநாட்டும் நோக்கத்துடன் இம்மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாநாட்டின் முன்னோடியாக, ஜன., 26ம் தேதி முதல் அரசியலமைப்பு விழிப்புணர்வு யாத்திரை நடத்தப்படும். இந்த யாத்திரை, அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் பயணம் செய்து, அரசியல் சாசனத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படங்கள் மற்றும் ஸ்டில் படங்கள் திரையிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சிகள் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கல்வி துறையுடன் இணைந்து நடத்தப்படும். பிப்., 24, 25ம் தேதிகளில் நடக்கும் மாநாட்டில், கே.ஆர்.இ.ஐ.எஸ்., என்ற கர்நாடக உறைவிட கல்வி நிறுவனங்கள் சங்கத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களின் கருத்தரங்கம், அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதில் பல்வேறு தலைப்புகளில் நிபுணர்களின் விவாதங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது.