புகையிலை பொருட்கள் நுகர்வு: வயது வரம்பு 21ஆக உயர்வு
புகையிலை பொருட்கள் நுகர்வு: வயது வரம்பு 21ஆக உயர்வு
ADDED : பிப் 22, 2024 07:16 AM
பெங்களூரு: பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்க தடை விதிக்கும் மசோதா, கர்நாடகா சட்டசபையில் நேற்று நிறைவேறியது.
பள்ளி, கல்லுாரிகளை சுற்றியுள்ள கடைகளில், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்க தடை விதிக்கும் மசோதாவை, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.
மசோதா தாக்கல் செய்த பின்னர், அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், ''பொது இடத்தில் சிகரெட் புகைத்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இந்த அபராத தொகையை 1,000 ரூபாயாக, உயர்த்தி உள்ளோம். இளம்தலைமுறையினர் ஆரோக்யத்தை பேணுவது நமது கடமை,'' என்றார்.
இந்த மசோதாவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக் பாராட்டுத் தெரிவித்து உள்ளார். ''இது நல்ல முடிவு. பள்ளி, கல்லுாரியை சுற்றி சிகரெட் விற்பனை செய்யும், கடைக்காரர்களிடம் 1,000 ரூபாய்க்கு பதிலாக 10,000 ரூபாய், அபராதம் விதிக்க வேண்டும்'' என்றார்.
இதன்மூலம் பள்ளி, கல்லுாரிகளை சுற்றியுள்ள கடைகளில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும், கடைக்காரர்களுக்கு, இனி 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
புகையிலைப் பொருட்கள் வாங்குவதற்கான வயது 18ல் இருந்து 21ஆக, உயர்த்தப்பட்டு உள்ளது. இதுதவிர பார், உணவகத்தில் ஹுக்கா விற்பனைக்கும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்களுக்கு, ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும், 50,000 ரூபாயும் இனி அபராதம் விதிக்கப்படும்.