கனடா பிரதமருடன் 3 ஆண்டுகளாக தொடர்பு : பன்னுன் பகீர் தகவல்
கனடா பிரதமருடன் 3 ஆண்டுகளாக தொடர்பு : பன்னுன் பகீர் தகவல்
ADDED : அக் 16, 2024 09:42 PM

வாஷிங்டன்; சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு கடந்த 3 ஆண்டுகளாக கனடா பிரதமருடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்க மற்றும் கனடா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கடந்தாண்டு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியான ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா,கனடா குடியுரிமை பெற்ற சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்காவில் வைத்தே கொல்ல இந்தியா தீட்டிய சதி திட்டத்தை அமெரிக்க அரசு முறியடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் சதி பின்னணியில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது குற்றம்சாட்டினார். இதனால் இந்திய- கனடா உறவு முறிந்தது. இந்த சம்பவம் எதிரொலியாக இரு நாடுகளிலும் தூதர்க அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: கனடா குடியுரிமை பெற்ற தெற்காசியர்கள் மிரட்டப்படுவதும், கொலை வெறி தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த சதி வேலைக்கு பின்னால், சில இந்திய ஏஜென்ட்கள் உள்ளனர்.
அவர்கள், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் உதவியுடன் இதை அரேங்கேற்றுவதை, கனடா ராயல் போலீசார் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். இதில் தவறு இந்தியா மீது உள்ளது. எனவே தான் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.
இவரது இந்த பேட்டியை ஆதரித்து இன்று குர்பத்வந்த் சிங் பன்னுன் சி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ளதாவது,
'ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்த இந்திய ஏஜென்டுகளுக்கு கனடாவுக்கான இந்திய தூதர் தளவாடங்கள் மற்றும் உளவுத்துறை ஆதரவை' வழங்கியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அறிக்கை, நீதி, சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் கனடா அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை காட்டுகிறது. சீக்கியர்களுக்கான நீதி அமைப்பும் கடந்த 2-3 ஆண்டுகளாக கனடா பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு வருகிறது என்றார்.