காலணி வீசிய வக்கீல் ராகேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு அனுமதி
காலணி வீசிய வக்கீல் ராகேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு அனுமதி
ADDED : அக் 16, 2025 10:08 PM

புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, சமீபத்தில் வழக்கு விசாரணைக்காக கூடியது. அப்போது அங்கிருந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி வீசினார். இச்சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை பெரிதுப்படுத்தாத தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், 'இது போன்ற செயல்கள் என்னை பாதிக்காது' என்றார். அவர் கேட்டுக் கொண்டதன்படி, வழக்கு எதுவும் பதியாமல், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை டில்லி போலீசார் அன்றிரவே விடுவித்தனர். எனினும், தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்க ராகேஷ் கிஷோர் மறுத்தார்.
விசாரணையில், மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோவிலில், பகவான் விஷ்ணு சிலையை சீரமைப்பது குறித்த வழக்கில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்த கருத்துகளால் அதிருப்தி அடைந்து, அவர் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீசியது தெரிய வந்தது.
இச்சம்பவத்தை அடுத்து, ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஒப்புதல் அளித்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் நேற்று, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
இதன் பின், நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், ''நாங்கள் அனைவரும் பேச்சுரிமைக்கு ஆதரவானவர்கள். ஆனால் அதை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பதே பிரச்னை. நம் மதம் ஒருபோதும் வன்முறையை ஊக்குவிக்கவில்லை. சமூக ஊடகங்களில் எல்லாமே விற்கக்கூடிய பொருளாக மாறி விட்டது,'' என்றார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.