அத்துமீறிய அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
அத்துமீறிய அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
ADDED : அக் 01, 2024 02:10 AM

புதுடில்லி, அசாமில், 47 குடும்பத்தினரின் வீடுகளை இடித்து தள்ளிய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதற்காக, மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் வீடுகளை, 'புல்டோசர்' வைத்து இடிப்பது தொடர்ந்து நடந்து வந்தது.
இது போன்ற நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறிய உச்ச நீதிமன்றம், அக்., 1 வரை நாடு முழுதும் இந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது.
இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அசாமில் காம்ரூப் மாவட்டத்தின் கட்ச்தோலி பதார் கிராமத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி, 47 குடும்பங்களின் வீடுகளை மாநில அரசு இடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில், 'சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் முன் அனுமதி பெற்று அங்கு வசித்து வந்தோம். ஆனால், காம்ரூப் மாவட்ட நிர்வாகம் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி புல்டோசர் வைத்து இடித்து தள்ளியுள்ளது.
'இது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவு:
நீதிமன்ற இடைக்காலத் தடை அமலில் உள்ளபோது, 47 குடும்பத்தினரின் வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. இது நீதிமன்ற அவமதிப்பாக கருதி, அசாம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.
இதற்கு, மூன்று வாரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரை, புல்டோசர் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.