லோக்சபா தேர்தலில் போட்டி: டாக்டர் மஞ்சுநாத் விளக்கம்
லோக்சபா தேர்தலில் போட்டி: டாக்டர் மஞ்சுநாத் விளக்கம்
ADDED : பிப் 22, 2024 06:55 AM

மாண்டியா: “லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்தால், அதுபற்றி நானே வெளியில் கூறுவேன்,” என, டாக்டர் மஞ்சுநாத் விளக்கம் அளித்து உள்ளார்.
ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத்.
டாக்டரான இவர் ஜெயதேவா மருத்துவமனை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் அல்லது பெங்களூரு வடக்கில், மஞ்சுநாத்தை களமிறக்க ம.ஜ.த., தலைவர் குமாரசாமி முயற்சி செய்து வருகிறார்.
பா.ஜ.,வும் தங்கள் கட்சி வேட்பாளராக, தேர்தலில் போட்டியிடும்படி, மஞ்சுநாத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
இதுகுறித்து மாண்டியாவில் மஞ்சுநாத் நேற்று அளித்த பேட்டி:
அரசியலுக்கு வர வேண்டுமா, லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்பது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தால், அதுபற்றி கண்டிப்பாக வெளிப்படுத்துவேன்.
கர்நாடகாவில் இதயநோய் சிகிச்சையில், புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வந்தது போல், தேசிய அளவிலும் கொண்டு வர வேண்டும் என்று, என்னிடம் மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மஞ்சுநாத் மனைவி அனுசுயா கூறுகையில், ''நான் அரசியல்குடும்பத்தில் பிறந்தவள். நான் பிறந்த மறுநாளே எனது தந்தை தேவகவுடா எம்.எல்.ஏ., ஆனார். அரசியலில் வெற்றி, தோல்வியை பார்த்து உள்ளேன்.
''எனது கணவர் மஞ்சுநாத் டாக்டராக, மக்களுக்கு சேவை செய்துள்ளார். தேர்தலில் போட்டியிடும்படி, அவருக்கு அழுத்தம் வருகிறது. நிதானமாக யோசித்து முடிவுகள் எடுக்க வேண்டும்,'' என்றார்.