ADDED : ஜன 10, 2025 11:18 PM

பெங்களூரு: “கர்நாடகா வனப்பகுதியில் நக்சல்கள் நடமாடுகின்றனரா என்பதை தொடர்ந்து கண்காணிப்போம்,” என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆறு நக்சல்கள் சரண் அடைந்த விஷயத்திலும், பா.ஜ., அரசியல் செய்கிறது. மனம் திருந்திய நக்சல் மறுவாழ்வுக்காக எங்களால் முடிந்ததை செய்கிறோம். அவர்கள் அரசின் உதவியை நாடி வந்துள்ளனர்.
சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து பணிகளும் செய்கிறோம். பா.ஜ.,வுக்கு இதெல்லாம் தெரியாது. அவர்கள் எப்படி அரசாங்கத்தை நடத்தினர் என்றே தெரியவில்லை.
தற்போது சரண் அடைந்த நக்சல் குழுவில் இருந்த ரவீந்திரா என்ற நக்சலை பற்றி எந்த தகவலும் இல்லை. நக்சல் குழுவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். என்ன காரணம் என்று தெரியவில்லை. கர்நாடகா வனப்பகுதியில் வெளிமாநில நக்சல் நடமாடுகிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிப்போம்.
என்கவுண்டரில் உயிரிழந்த நக்சல் இயக்க தலைவர் விக்ரம் கவுடா குடும்பத்திற்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. இதை பரீசிலித்து முடிவு செய்வோம்.
வரும் 13ம் தேதி நடக்க உள்ள, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் என்னவென்று எனக்கு தெரியாது. பட்ஜெட் குறித்து ஆலோசனை நடக்கலாம். வளர்ச்சிப் பணிகள், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

