பசவண்ணர் குறித்து சர்ச்சை கருத்து எத்னால் உருவ பொம்மை எரிப்பு
பசவண்ணர் குறித்து சர்ச்சை கருத்து எத்னால் உருவ பொம்மை எரிப்பு
ADDED : டிச 07, 2024 11:10 PM

பெலகாவி: பசவண்ணர் குறித்து சர்ச்சை கருத்துத் தெரிவித்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் உருவபொம்மையை எரித்து, லிங்காயத் சமூகத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
வக்பு வாரியம் விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுத்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குழுவினர் போராட்டம் நடத்தினர்.
கடந்த மாதம் 27ம் தேதி கலபுரகியில் நடந்த போராட்டத்தின்போது, லிங்காயத் சமூக மக்கள், கடவுள்போன்று வணங்கும் பசவண்ணர் குறித்து சர்ச்சையான கருத்தை எத்னால் தெரிவித்தார். பசவண்ணர் போன்று காங்கிரஸ் அரசும், ஆற்றில் குதித்து சாகட்டும் என்று கூறி இருந்தார்.
இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எத்னாலுக்கு எதிராக கண்டனம் எழுந்தது. தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் லிங்காயத் சமூகத்தினர் விட்டபாடில்லை.
எத்னாலை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, பெலகாவியில் நேற்று லிங்காயத் சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். ராணி சென்னம்மா சதுக்கத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, கலெக்டர் முகமது ரோஷனிடம் மனு அளித்தனர்.
பின், கன்னட சாகித்ய பவன் முன் ஒன்றுகூடி எத்னாலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவரது உருவப்பொம்மையை எரித்தனர். இதை தடுக்க முயன்றதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் நிலைமை சகஜமானது.
எத்னாலும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.