கேரளா குறித்து சர்ச்சை கருத்து: மத்திய அமைச்சருக்கு கண்டனம்
கேரளா குறித்து சர்ச்சை கருத்து: மத்திய அமைச்சருக்கு கண்டனம்
ADDED : பிப் 03, 2025 03:47 AM

திருவனந்தபுரம் : கேரளா குறித்து கூறிய கருத்துக்கு மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மன்னிப்பு கேட்க, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேரளாவுக்கான எந்த ஒரு திட்டமும் இல்லை என, கேரளாவில் ஆளும் மார்க்., கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன், 'சாலைகள், கட்டமைப்பு வசதிகள், கல்வி போன்றவற்றில் மாநிலம் பின்தங்கியுள்ளது என்று அறிவியுங்கள். 'நிதிக் கமிஷன் ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கும்' எனக் குறிப்பிட்டார்.
இதற்கு, காங்கிரசைச் சேர்ந்த கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தன் பேச்சுக்கு மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மன்னிப்பு கேட்க வேண்டும். கேரளாவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அவர், அந்தப் பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழந்து விட்டார். அவரது கருத்தை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஏற்கின்றனவா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.