நிதிஷ் குறித்து சர்ச்சை கருத்து: லாலுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
நிதிஷ் குறித்து சர்ச்சை கருத்து: லாலுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
UPDATED : டிச 11, 2024 02:44 PM
ADDED : டிச 11, 2024 01:02 AM

பாட்னா:பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் குறித்து, முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது. இங்கு, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, 'மஹிளா சம்வத் யாத்திரை' என்ற பயண திட்டத்தை, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், வரும் 15ல் துவங்குகிறார். இத்திட்டத்தின்படி, பீஹார் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பெண்களை சந்தித்து குறைகளை கேட்க, அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த யாத்திரை தொடர்பாக பாட்னாவில், நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், “பெண்களை பார்க்க வேண்டும் என்பதற்காக, நிதிஷ் குமார் யாத்திரை செல்கிறார்,” என, விமர்சித்தார்.
முதல்வர் நிதிஷ் குறித்து லாலு பிரசாத் யாதவ் தெரிவித்த கருத்துக்கு, பா.ஜ., - ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில், “லாலுவின் மனநிலை மோசமடைந்து விட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவரால் விஷயங்களைப் புரிந்து கொண்டு எதையும் சொல்ல முடியவில்லை,” என்றார்.
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறுகையில், “பெண்களுக்கு எதிரான லாலுவின் கருத்தை, மம்தா பானர்ஜியும், சோனியாவும் கண்டிக்க வேண்டும். பீஹார் சட்டசபை தேர்தலில், லாலுவுக்கு பெண்கள் பாடம் புகட்டுவர்,” என்றார்.