ADDED : மார் 16, 2026 02:30 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில், சப் - இன்ஸ்பெக்டர் தேர்வில் ஒரு கேள்விக்கான விருப்பப் பதில்களில், 'பண்டிட்' என்ற வார்த்தை இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து விசாரிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உ.பி., போலீஸ் தேர்வு வாரியம் சார்பில், சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் பொது அறிவுப் பகுதியில், 'சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்பவர்களை ஒரு வார்த்தையில் எவ்வாறு அழைப்பீர்கள்' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்காக, 'பண்டிட், சந்தர்ப்பவாதி, அப்பாவி, நற்பண்பாளர்' ஆகிய நான்கு விருப்ப பதில்கள் இடம்பெற்றிருந்தன. இதில், பண்டிட் என்பது மரியாதைக்குரிய வார்த்தை. இது இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநில போலீஸ் வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
