உச்ச நீதிமன்றம் பற்றி சர்ச்சை கருத்து ஊக்குவிக்க முடியாது என கண்டிப்பு
உச்ச நீதிமன்றம் பற்றி சர்ச்சை கருத்து ஊக்குவிக்க முடியாது என கண்டிப்பு
ADDED : மே 06, 2025 08:46 PM

புதுடில்லி:உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த பா.ஜ., -- எம்.பி., நிஷிகாந்த் துபேவுக்கு எதிரான பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரம், 'இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை நீதிமன்றம் ஊக்குவிக்காது' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்டின் கோடா லோக்சபா தொகுதியில் இருந்து பா.ஜ., சார்பில் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நிஷிகாந்த் துபே. இவர், உச்ச நீதிமன்றம் குறித்து சர்ச்சையான கருத்துகளை கடந்த மாதம் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்தது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுபோல, வக்ப் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கிலும், சட்டத்தின் சில விதிகளை நிறுத்தி வைக்கப்போவதாக தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
இதுபற்றி பேசிய நிஷிகாந்த் துபே, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இந்நிலையில், நிஷிகாந்த் துபே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பா.ஜ., -- எம்.பி., நிஷிகாந்த் துபேக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
எனினும், 'இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்காது; அதேநேரம், இதுபோன்ற கருத்துகளை நீதிமன்றம் ஊக்குவிக்காது. இது தொடர்பாக, குறுகிய உத்தரவு ஒன்றை விரைவில் பிறப்பிப்போம். சில விளக்கங்களையும் தருவோம்' என, அமர்வு தெரிவித்தது.