ராகுல் பற்றி சர்ச்சை பேச்சு: சிவசேனா எம்.எல்.ஏ.,வுக்கு வலுக்கிறது கண்டனம்
ராகுல் பற்றி சர்ச்சை பேச்சு: சிவசேனா எம்.எல்.ஏ.,வுக்கு வலுக்கிறது கண்டனம்
ADDED : செப் 16, 2024 02:26 PM

மும்பை: ''எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவேன்,'' என மஹாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா கட்சி எம்.எல்.ஏ., சஞ்சய் கெயிக்வாட் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என பா.ஜ., தெரிவித்து உள்ளது.
புல்தானா தொகுதி எம்.எல்.ஏ.,வான சஞ்சய் கெயிக்வாட் கூறியதாவது: அமெரிக்காவில் ராகுல் இருந்த போது, இட ஒதுக்கீடு பற்றி தவறாக பேசினார். இதன் மூலம் காங்கிரசின் உண்மை முகம் வெளிப்பட்டு உள்ளது. ராகுலின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார். இவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் கூட்டணியில் உள்ள பா.ஜ.,வின் மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது: எம்.எல்.ஏ.,வின் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது என்றார்.
சஞ்சய் கெயிக்வாட் இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்துவது இது முதல்முறை கிடையாது. கடந்த மாதம், அவரின் காரை, பணியில் இருந்த போலீஸ்காரர் கழுவுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைலராகியது. இதனையடுத்து, காருக்குள் அவர் வாந்தி எடுத்ததால் கழுவியதாக கூறி சஞ்சய் சமாளித்தார்.
அதற்கு முன்னர் பிப்., மாதம் 1987 ம் ஆண்டு புலி ஒன்றை வேட்டையாடி, அதன் பல்லை பிடுங்கி செயினில் கோர்த்து மாலையாக அணிந்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். வனத்துறையினர், அந்த செயினை வாங்கி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்து, சஞ்சய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.