ராமர் சிலை குறித்து காங்., அமைச்சர் சர்ச்சை பேச்சு
ராமர் சிலை குறித்து காங்., அமைச்சர் சர்ச்சை பேச்சு
ADDED : ஜன 18, 2024 05:06 AM
பெங்களூரு: அயோத்தி ராம் லீலா சிலை குறித்து 'கூடாரத்தில் பொம்மைகள்' என்று கர்நாடக அமைச்சர் ராஜண்ணா கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சித்தராமையா அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.ராஜண்ணா.
இவர் எப்போதுமே சர்ச்சைக்கு பெயர்பெற்றவர் தான். சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். துணை முதல்வர் சிவகுமார் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, கூடுதல் துணை முதல்வர் பதவிகளை உருவாக்க வேண்டுமென கோஷத்தை முதன் முறையாக எழுப்பி, மாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல் டில்லி வரை சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர் தான்.
அப்படிப்பட்டவர் நேற்று பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அவர் பேசியதாவது:
கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவி கட்சியினர் இரண்டு பொம்மைகளை கூடாரத்தில் வைத்து, அதற்கு ராமர் என்று பெயர்சூட்டி, பொதுமக்களை ஏமாற்றி வருகிறது.
1,000 ஆண்டுகால வரலாறு கொண்ட ராமர் கோவில்கள் நாட்டில் உள்ளன. ஆனால், தேர்தல் ஆதாயத்துக்காக கோவில்களை பா.ஜ., கட்டுகிறது. மக்களை அக்கட்சி ஏமாற்றுகிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அயோத்திக்கு சென்றிருந்தேன். தற்காலிக கூடாரத்தில் இரண்டு பொம்மைகளை வைத்திருந்தனர். அதை அவர்கள் ராம் என்று அழைத்தனர். அங்கு எனக்கு எந்தவித அதிர்வும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
ராஜண்ணாவின் இந்த சர்ச்சை பேச்சு, நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.