பாட புத்தகத்தில் மாற்றம் செய்ததால் சர்ச்சை! : என்.சி.இ.ஆர்.டி.,க்கு வலுக்கிறது எதிர்ப்பு
பாட புத்தகத்தில் மாற்றம் செய்ததால் சர்ச்சை! : என்.சி.இ.ஆர்.டி.,க்கு வலுக்கிறது எதிர்ப்பு
UPDATED : ஜூன் 16, 2024 11:51 PM
ADDED : ஜூன் 16, 2024 11:47 PM

புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் அயோத்தி விவகாரம் தொடர்பான பாடத்தில் பாபர் மசூதி, குஜராத் கலவரம் உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டிருப்பது, புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது.
பள்ளி கல்விக்கான பாடத்திட்டங்களை வகுத்து தருகிறது, என்.சி.இ.ஆர்.டி., அமைப்பு. இது வடிவமைத்து தரும் புத்தகங்கள், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் உள்ளிட்ட கல்வி வாரியங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
அவ்வப்போது, இது தன் பாடப்புத்தகங்களில் திருத்தங்களை மேற்கொள்கிறது.
கடந்த 2014ல் இருந்து, இதுவரை நான்கு முறை பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தின்போது, மாணவர்கள் பள்ளியில் நேரடியாக படிக்கும் வாய்ப்பை இழந்ததால், அவர்களுடைய சுமையை குறைக்கும் வகையில், சில பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டன. சிலவற்றில் பாடங்கள் குறைக்கப்பட்டன.
இந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 வரலாற்று பாடப்புத்தகத்தில், பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஹிந்து சின்னங்கள்
குறிப்பாக, உத்தர பிரதேசத்தின் அயோத்தி விவகாரம் தொடர்பான பாடத்தில் பெரிய அளவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நான்கு பக்கங்களாக இருந்த அயோத்தி விவகாரம் தொடர்பான பாடம், தற்போது இரண்டு பக்கமாக சுருக்கப்பட்டுள்ளது.
இதற்காக முந்தைய பாடத்தில் இருந்த பல பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு பா.ஜ., நடத்திய ரத யாத்திரை, கரசேவகர்களின் பங்கு, பாபர் மசூதி 1992 டிச., 6ல் இடிக்கப்பட்ட பின் நடந்த வன்முறைகள், பா.ஜ, ஆண்ட மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டது, அயோத்தி சம்பவத்துக்கு பா.ஜ., வருத்தம் தெரிவித்தது போன்றவை நீக்கப்பட்டுள்ளன.
முந்தைய பாடத்தில், 16ம் நுாற்றாண்டில் முகலாய பேரரசர் பாபரின் தளபதி ஜெனரல் மிர் பாகியால், பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
தற்போது அது, ராமர் பிறந்த இடத்தில், 1528ல் மூன்று குவிமாடங்கள் உள்ள ஹிந்து சின்னங்கள் தெரியும் வகையில் மசூதி கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய பாடத்தில், 1986ல் அப்போதைய பைசாபாத் மாவட்ட நீதிமன்றம், மசூதியை இரண்டு தரப்பும் வழிபட திறக்க உத்தரவிட்டது கூறப்பட்டிருந்தது.
குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை நடந்த ரத யாத்திரை, 1992ல் கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தது, அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை உள்ளிட்டவை கூறப்பட்டிருந்தன. தற்போது அவை நீக்கப்பட்டுள்ளன.
விமர்சனம்
அதே நேரத்தில் அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கின் விபரம், அதைத் தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டது, அதன் பிராண பிரதிஷ்டை நடந்தது தொடர்பான தகவல்கள் சேர்க்கப்பட்டுஉள்ளன.
உண்மையான வரலாற்றை வரும் தலைமுறையிடம் இருந்து மறைப்பதற்காகவும், மசூதியை இடிப்பதில் பா.ஜ.,வின் பங்கை மாணவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவும், இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மேலும், ராமர் கோவிலை பா.ஜ., கட்டியது என்பதை காட்டுவதற்காக திருத்தப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.