சீன படையெடுப்பு குறித்த மணிசங்கர் அய்யரின் கருத்தால் சர்ச்சை: பாஜ கண்டனம், காங்., சமாளிப்பு
சீன படையெடுப்பு குறித்த மணிசங்கர் அய்யரின் கருத்தால் சர்ச்சை: பாஜ கண்டனம், காங்., சமாளிப்பு
ADDED : மே 29, 2024 03:24 PM

புதுடில்லி: 1962ம் ஆண்டு சீனா படையெடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்து சர்ச்சை ஆகி உள்ளது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொளகிறேன் என அவர் கூறியுள்ளார். இது அவரின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் நழுவிக் கொண்டது. அதேநேரத்தில் பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் தெரிவிக்கும் கருத்துகள் அடிக்கடி சர்ச்சை ஆகிறது. '' பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளதால், அந்நாட்டை இந்தியா மதிக்க வேண்டும் '' என அவர், முன்பு பேசியிருந்த வீடியோ மீண்டும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அது அவரின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ், சமாளித்தது.
இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மணிசங்கர் அய்யர் பேசும் போது, 1962 ம் ஆண்டு இந்தியா மீது சீனா படையெடுத்தது என குற்றம்சாட்டப்படுகிறது '' எனக்கூறியிருந்தார். ஆனால், அந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்த நிலையில், குற்றம்சாட்டப்படுகிறது என்ற வார்த்தையை மணிசங்கர் கூறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கண்டனம் தெரிவிக்க துவங்கினர்.
இதனையடுத்து, சீன படையெடுப்பு குறித்து பேசும்போது குற்றம்சாட்டப்படுகிறது என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மணிசங்கர் அய்யர் கூறினார்.
அதேநேரத்தில், சீன படையெடுப்பை திருத்த முயற்சிக்கும் செயல் வெட்கக்கேடானது என பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அமித் மாளவியா வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் என்ற கோரிக்கையை சீனாவிற்காக நேரு திரும்ப பெற்றார். ராஜிவ் தொண்டு நிறுவனத்திற்கு நிதியுதவி பெற, சீனாவிடம் ராகுல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்.
சீன பொருட்களுக்காக இந்திய சந்தையை சோனியாவின் ஐமுகூ., அரசு திறந்துவிட்டதால், நாட்டின் சிறுகுறு வணிகம் பாதிக்கப்பட்டது. இந்தியாவிற்கு சொந்தமான 38 ஆயிரம் சதுர கி.மீ., நிலத்தை சீனா ஆக்கிரமித்த போதும், அந்நாட்டின் படையெடுப்பை மணிசங்கர் அய்யர் திருத்தி எழுத முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: குற்றம்சாட்டப்படுகிறது என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்கு மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது வயதை கருத்தில் கொண்டு சலுகை வழங்கப்பட வேண்டும். அவரது கருத்தில் இருந்து காங்கிரஸ் விலகிக் கொள்கிறது . 1962 ல் இந்தியா மீது சீனா படையெடுத்தது நிஜம். 2020 மே மாதம் லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.