சானிட்டரி நாப்கின் பெட்டியில் ராகுல் படத்தால் சர்ச்சை
சானிட்டரி நாப்கின் பெட்டியில் ராகுல் படத்தால் சர்ச்சை
ADDED : ஜூலை 04, 2025 11:52 PM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் பெண் வாக்காளர்களை கவரும் நோக்கில், காங்., சார்பில் வழங்கப்பட உள்ள சானிட்டரி நாப்கின் பெட்டியில், அக்கட்சி எம்.பி., ராகுல் புகைப்படம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்., - நவ., மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது.
காங்கிரசுடன் கூட்டணி வைத்து, முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தலை எதிர்கொள்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
பெண் வாக்காளர்களை கவரும் நோக்கில், மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 'பிரியதர்ஷினி உதான் யோஜனா' என்ற பிரசாரத்தை காங்., முன்னெடுத்துள்ளது. இதன்படி, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சானிட்டரி நாப்கின் பெட்டியில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த பெட்டியில், காங்., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இடம் பெற்றுள்ளது.
பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'சானிட்டரி நாப்கின் பெட்டியில் ராகுலின் படம் இருப்பது பீஹார் பெண்களை அவமதிக்கும் செயல். காங்., பெண்களுக்கு எதிரான கட்சி. வரும் சட்டசபை தேர்தலில், காங்., கூட்டணிக்கு பீஹார் பெண்கள் பாடம் புகட்டுவர்' என குறிப்பிட்டுள்ளார்.