பெலகாவி மஹா.,வுக்கு சொந்தம் பெண் அமைச்சர் பேச்சால் சர்ச்சை
பெலகாவி மஹா.,வுக்கு சொந்தம் பெண் அமைச்சர் பேச்சால் சர்ச்சை
ADDED : ஜன 08, 2024 10:55 PM

பெலகாவி: “மஹாராஷ்டிராவை சேர்ந்தது பெலகாவி,” என, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பேசியது, சர்ச்சைக்குக் காரணமாகி உள்ளது. 'அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, கர்நாடக பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பல ஆண்டு வரலாறு
கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ளது பெலகாவி மாவட்டம். இங்கு, மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.
இதனால் பெலகாவிக்கு, மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், பெலகாவியை விட்டு தர கர்நாடகா மறுத்து வருகிறது. இரு மாநிலங்களும் இடையே அவ்வப்போது எல்லை பிரச்னையும் நடக்கிறது.
இந்நிலையில், பெலகாவி நிப்பானி கரடகா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த கன்னட மாநாட்டில் கர்நாடகா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பேசுகையில், ''நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, பெலகாவி மஹாராஷ்டிராவுக்கு சொந்தமானது. தற்போது, பெலகாவி யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை உள்ளது.
கன்னட மொழிக்கு பல ஆண்டு வரலாறு உண்டு. இதை நமது இலக்கியங்கள் நிரூபித்து உள்ளன. கர்நாடகாவில் பிறப்பதற்கு நாம் நல்லது செய்திருக்க வேண்டும்,'' என்றார்.
'சுதந்திரத்திற்கு முன்பு, பெலகாவி மஹாராஷ்டிராவுக்கு சொந்தமானது' என, லட்சுமி ஹெப்பால்கர் கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நிலைப்பாடு என்ன?
பெங்களூரு எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் கூறுகையில், ''அகண்ட கர்நாடகாவில் பெலகாவி இணைந்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓட்டுக்காக பெலகாவி, மஹாராஷ்டிராவுக்குச் சொந்தமானது என, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியுள்ளார்.
''இதன்மூலம் 6.50 கோடி கன்னடர்களை, அவர் அவமதித்து உள்ளார். அவரை உடனடியாக, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். காஷ்மீர், பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்று காங்கிரஸ் கூறுகிறது. அவர்களின் நிலைப்பாடு என்ன?,'' என்றார்.
இன்னும் பல பா.ஜ, - எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் லட்சுமி ஹெப்பால்கரை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க, வலியுறுத்தி வருகின்றனர்.