மா.க., வாரிய நிதி ரூ.426 கோடி வனத்துறைக்கு மாற்றியதால் சர்ச்சை
மா.க., வாரிய நிதி ரூ.426 கோடி வனத்துறைக்கு மாற்றியதால் சர்ச்சை
ADDED : டிச 03, 2024 07:44 AM
பெங்களூரு: கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல், வாரியத்தின் கணக்கில் இருந்து 426 கோடி ரூபாயை, வனத்துறைக்கு மாற்ற அரசு உத்தரவிட்டது, சர்ச்சைக்கு காரணமானது.
வனத்தை உருவாக்குவது, காட்டு யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவது உட்பட, பல பணிகளுக்கு நிதி வழங்கும்படி, வனத்துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கணக்கில் இருந்து, 426 கோடி ரூபாயை வனத்துறைக்கு மாற்ற, நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவில்லை.
அரசின் செயலுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். 'வாரியம், அரசிடம் இருந்து, நிதியுதவி பெறாமல் தன் வருவாயில் இருந்தே, அனைத்து செலவுகளையும் செய்கிறது.
ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. எனவே இந்த வாரியத்தின் பணத்தை, வனத்துறைக்கு மாற்ற கூடாது' என, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
வாரியத்தின் நிதியை, வனத்துறைக்கு வழங்குவது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யவில்லை. வாரிய தலைவரின் பதவிக் காலம் முடிந்துள்ளது. புதிய தலைவரை நியமிக்கும் வரை, கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
'அரசு உத்தரவிட்டாலும், வாரிய கூட்டத்தில் எடுக்கும் முடிவே இறுதியானது' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம், 300 கோடி ரூபாயை பெற்று, வனம் மேம்பாடு, காட்டு யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இதனால் வாரியத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பணிகளுக்கு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பணத்தை பயன்படுத்தலாம். அதைத்தான் அரசு செய்கிறது. வனத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நோக்கம் ஒன்றுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.