பெண் நீதிபதிக்கு குற்றவாளி மிரட்டல் துவாரகா நீதிமன்றத்தில் பரபரப்பு
பெண் நீதிபதிக்கு குற்றவாளி மிரட்டல் துவாரகா நீதிமன்றத்தில் பரபரப்பு
ADDED : ஏப் 23, 2025 11:06 PM
நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது நீதிபதி உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வழக்கறிஞரும் தீர்ப்பளித்த நீதிபதியை, நீதிமன்றத்திலே மிரட்டிய சம்பவம் டில்லியில் நடந்தேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த 'விண்டேஜ் கிரெடிட் அண்ட் லீசிங் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜ் சிங்,63, மீது காசோலை மோசடி வழக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடுத்திருந்தது.
இந்த வழக்கு, புதுடில்லி துவாராக நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ஷிவாங்கி மங்களா, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜ் சிங் குற்றவாளி என அறிவித்தார்.
இந்த தீர்ப்பை கேட்டு ராஜ் சிங் மற்றும் அவரது வழக்கறிஞர் அதுல் குமார் ஆகிய இருவரும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
நீதிபதியின் அறைக்குள் அத்துமீறி புகுந்த இருவரும், 'நீ வெளியே வா, எப்படி உயிருடன் வீடு செல்கிறாய் என பார்க்கலாம். உன் வேலையையே காலி செய்து விடுவோம்' என மிராட்டினர். மேலும், ராஜ் சிங் தான் கையில் வைத்திருந்த ஒரு பொருளை நீதிபதி ஷிவாங்கி மீது வீச முயன்றார்.
இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதி ஷிவாங்கி மங்களா, கடந்த 5ம் தேதி பிறப்பித்த உத்தரவு:
காசோலை மோசடி வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்ட ராஜ் சிங்குக்கு 22 மாத சிறைத் தண்டனை மற்றும் 6.65 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதால், குற்றவாளி ராஜ் சிங்கும், அவரது வழக்கறிஞர் அதுல் குமாரும் என்னை மிரட்டினர். என் பதவியை ராஜினாமா செய்ய மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நெருக்கடி கொடுத்தனர்.
குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என மிரட்டிய வழக்கறிஞர் அதுல் குமார், எனக்கு எதிராக புகார் அளித்து என் பதவியை பறிப்பேன் என மிரட்டினார்.
இருவர் மீதும் தேசிய மகளிர் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறேன்.
மேலும், வழக்கறிஞர் அதுல் குமார், நீதிமன்றத்தில் நடந்து கொண்டதற்காக எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். நீதிமன்றத்தில் பெண் நீதிபதியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக நடவடிக்கை எடுக்க, டில்லி உயர் நீதிமன்றத்துக்கு ஏன் பரிந்துரைக்கக்கூடாது என்பதற்கான பதிலையும் விளக்கத்தில் அதுல் குமார் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பெண் நீதிபதியை குற்றவாளியும், அவரது வழக்கறிஞரும் பகிரங்கமாக மிரட்டியது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
நமது சிறப்பு நிருபர்

