காங்., வழங்கும் குக்கர், புடவைகளுக்கு தீவைப்பேன்! ஒப்பந்ததாரர்கள் மூலம் பணம் கடத்துவதாக குமாரசாமி எச்சரிக்கை
காங்., வழங்கும் குக்கர், புடவைகளுக்கு தீவைப்பேன்! ஒப்பந்ததாரர்கள் மூலம் பணம் கடத்துவதாக குமாரசாமி எச்சரிக்கை
ADDED : மார் 20, 2024 02:07 AM

பெங்களூரு : “பெங்களூரு ரூரல் தொகுதியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணம் கடத்தப்பட்டு, பல இடங்களில் மறைத்து வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் ம.ஜ.த., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். நானே குக்கர், புடவைகளை கண்டுபிடித்து தீ வைப்பேன்,” என, முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரித்துள்ளார்.
பெங்களூரு ரூரல் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக மஞ்சுநாத் போட்டியிடுகிறார். இவர் தேவகவுடாவின் மருமகன். இத்தொகுதியில் காங்கிரசில் சுரேஷ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், நேற்று தேவகவுடாவை அவரது இல்லத்தில் குமாரசாமி சந்தித்து பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் நடத்தி வெற்றி பெற சிவகுமார் சகோதரர்கள் முயற்சிக்கின்றனர்.
குக்கர் தயாரிப்பு
வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கப்பட்டு வருகிறது. ஹாரோஹள்ளியை சேர்ந்த, 'ஸ்டவ் கிராப்ட் லிமிடெட்' நிறுவனம், தொடர்ந்து குக்கர்களை தயாரித்து வருகிறது.
'சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருந்தார். ஆனால், மலவாடி கிராமத்தில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் படம் பொறிக்கப்பட்ட குக்கர் வழங்கப்படுகிறது. இச்சம்பவம் நடந்து 48 மணி நேரத்துக்கு மேலாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தேன். விசாரணை நடத்துமாறு ராம்நகர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தார்.
வணிக வரித்துறை அதிகாரிகளை அனுப்பியிருந்தார். அவர்களும், 'ஒன்றும் நடக்கவில்லை' என்று அறிக்கை கொடுத்து, வழக்கை மூடிவிட்டனர். (அப்போது குக்கர் தயாரிக்கப்பட்டு அனுப்பும் படத்தை காண்பித்தார்).
மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி ஆகியோர் சுதந்திரமான, நியாயமான தேர்தல் பணிகளை நடத்த தவறிவிட்டனர்.
சிவகுமார், சுரேஷ் சகோதரர்களின் தேர்தல் விதிமீறல்களை கட்டுப்படுத்தும் தைரியம் இவர்களுக்கு இல்லை.
இந்த மூன்று அதிகாரிகளையும் தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
அரசியல் ரீதியாக எனக்கு, விஷம் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் சிவகுமார் சகோதரர்கள் எண்ணம் ஈடேறவில்லை. விரைவில் முழு மூச்சுடன் தேர்தல் களத்தில் இறங்குவேன்.
பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளை, துணை முதல்வர் தேர்தலுக்காக தவறாக பயன்படுத்துகிறார். வார்டு வாரியாக காங்கிரசுக்கு ஓட்டு போட வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார்.
ஒப்பந்ததாரர்கள் மூலம் பணம் கடத்தப்பட்டு, பல இடங்களில் மறைத்து வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூரு ரூரல் தொகுதியில் சுதந்திரமான, நேர்மையான, வெளிப்படையான தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொண்டர்கள் போராட்டம்
இவ்விஷயத்தில் தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கா விட்டால் ம.ஜ.த., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். நானே குக்கர், புடவைகளை கண்டுபிடித்து தீ வைப்பேன். எனக்கு எதிராக யார் வழக்குப் பதிவு செய்கின்றனர் என்பதை பார்ப்போம்.
கடந்த 2002 இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள் 'மிஸ்டர்' சிவகுமார். சித்லகட்டா, தேவனஹள்ளி, மைசூரு ஆகிய இடங்களில் இருந்து சட்டவிரோதமாக ஓட்டு போட அழைத்து வந்தவர்களை, ஜட்டியுடன் அமர வைத்தோம். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டால், இதே நிலை தான் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
20_DMR_0002
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த குக்கர் அடங்கிய பெட்டிகளை, குமாரசாமி காண்பித்தார். இடம்: பெங்களூரு.
***

