கள்ளக்காதலியின் கணவரை கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது
கள்ளக்காதலியின் கணவரை கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது
ADDED : அக் 23, 2024 08:56 PM

குடகு: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலியின் கணவரை மூச்சுத்திணறடித்து கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
ஹாவேரியை சேர்ந்தவர் இப்ராஸ். இவரது மனைவி ஆயிஷா, 29. இவர்களின் பக்கத்து வீட்டில் கோட்ரேஷ், 28, என்பவர் வசிக்கிறார். இவர் குடகு சனிவாரசந்தே போலீஸ் நிலைய போலீஸ்காரர்.
கோட்ரேஷுக்கும், ஆயிஷாவுக்கும், பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இதுபற்றி கணவர் இப்ராஸ்க்கு தெரிந்தது. மனைவியை கண்டித்தார். ஆனால் அவர், கணவர் பேச்சை கேட்கவில்லை.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொல்ல மனைவி முடிவு செய்தார். கள்ளக்காதலன் கோட்ரேஷிடம் கூறினார். 16ம் தேதி இரவு, இப்ராஸ் வீட்டில் துாங்கிக் கொண்டு இருந்தார்.
அவரை முகத்தை தலையணையால் அமுக்கி கோட்ரேஷும், ஆயிஷாவும் கொல்ல முயன்றனர். சுதாரித்துக் கொண்ட இப்ராஸ் தப்பினார்.
தன்னை கொல்ல முயன்றதாக மனைவி, கள்ளக்காதலன் மீது, 17ம் தேதி சனிவாரசந்தே போலீசில் புகார் செய்தார். ஆனால் புகாரை வாங்க போலீசார் மறுத்துவிட்டனர்.
நேற்று முன்தினம் குடகு எஸ்.பி., ராமராஜனை சந்தித்து, இப்ராஸ் புகார் அளித்தார். போலீசார் புகாரை வாங்க மறுத்தது பற்றியும் கூறினார். கோபம் அடைந்த எஸ்.பி., ராமராஜன், கோட்ரேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய, சனிவாரசந்தே போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இப்ராஸ் புகார் பெறப்பட்டு கோட்ரேஷ், ஆயிஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று இருவரும் கைது செய்யப்பட்டனர். கோட்ரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.