ADDED : டிச 14, 2024 11:13 PM

பெங்களூரு: ''கொரோனா காலத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த, எஸ்.ஐ.டி., அமைக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கொரோனா முறைகேடு தொடர்பாக, ஒவ்வொரு வழக்காக பதிவாகிறது. அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரணை நடத்த, எஸ்.ஐ.டி., அமைக்க வேண்டும் என்பதை, அரசு உணர்ந்துள்ளது. அமைச்சரவையில் முடிவு செய்திருந்தாலும், இன்னும் எஸ்.ஐ.டி., அமைக்கவில்லை. வரும் நாட்களில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையின்றி அதிக பணம் கொடுத்து, மருத்துவ உபகரணங்களை வாங்கியுள்ளனர். அரசு கருவூலத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துவோம்.
பாதுகாப்பு கவச உடை, முகக்கவசம் வாங்கியதில், குளறுபடி நடந்துள்ளது. ஏற்கனவே விசாரணை துவங்கியுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. நிர்வகிப்பு பொறுப்பு, கமிஷனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மருந்துகள் கட்டுப்பாட்டு துறை, மேலும் தரம் உயர்த்தப்படும்.
தரமற்ற மருந்துகள் சப்ளை செய்யப்படுவதாக, புகார் வந்துள்ளது. எனவே மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறைகள், ஒரே துறையாக இணைக்கப்பட்டது. தனித்தனி கமிஷனர்கள் நியமிக்கப்படுவர்.
வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. தரமான குடிநீர், உணவு உட்கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். அதிக மக்கள் நெரிசல் உள்ள இடங்களில் நடமாடுவதை, தவிர்க்க வேண்டும்.
தெலுங்கானாவில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில், அரசியல் நோக்கம் இல்லை. தேவையின்றி காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர். அங்குள்ள சூழ்நிலை குறித்து, எங்களுக்கு தெரியாது. ஆனால் சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை. தவறு செய்தால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்தே தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.