பிரதமரை சந்திக்க வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்
பிரதமரை சந்திக்க வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்
UPDATED : ஜூன் 12, 2025 01:40 AM
ADDED : ஜூன் 12, 2025 12:34 AM

கொரோனா தொற்று பரவல், நாடு முழுதும் அதிகரித்து வருவதால், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வரும் அமைச்சர்களுக்கு, ஆர்.டி., - பி.சி.ஆர்., எனப்படும், கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து, தற்போது 7,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த, 24 மணி நேரத்தில், 306 புதிய தொற்றுகளும், ஆறு இறப்புகளும் பதிவாகியுள்ளன. கேரளாவில் மூன்று பேரும், கர்நாடகாவில் இரண்டு பேரும், மஹாராஷ்டிராவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தவிர, நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, நாடு முழுதும், 7,121 பேர் கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக, 2,223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் மத்திய அமைச்சர்களுக்கு, ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமரை யார் சந்திக்க வந்தாலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வந்த பிறகே சந்திக்க முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த சுற்றுப் பயணத்தின்போது, பிரதமர் இருக்கும் மேடையில் பங்கேற்கும் அனைவருக்குமே ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- நமது டில்லி நிருபர் -