திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: மத்திய அரசு விளக்கம்
திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: மத்திய அரசு விளக்கம்
ADDED : ஜூலை 03, 2025 12:33 AM
புதுடில்லி: 'கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் மாரடைப்பு காரணமாக அடுத்தடுத்து பலர் உயிரிழந்ததற்கு, கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல' என, மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹாச-ன் மாவட்டத்தில் மாரடைப்பால் அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். குறிப்பாக இளம் வயதினர் இறந்தனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 22 பேர் மாரடைப்பால் உயிரிழந்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த, மாநில அரசு சிறப்பு குழு அமைத்தது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் கூறுகையில், “கொரோனா தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு வினியோகித்ததே இதுபோன்ற திடீர் மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம்.
“எனவே, நெஞ்சு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்,” என்றார்.
எனினும், முதல்வர் சித்தராமையாவின் கருத்தை மறுக்கும் வகையில், மத்திய சுகாதாரத்துறை நேற்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அத்துறை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழந்ததற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல; இது தவறான தகவல்.
கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானவை என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன; இதனால், பக்க விளைவுகள் மிகவும் அரிதாகவே ஏற்படும்.
ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் இணைந்து நடத்திய விரிவான ஆய்வுகள், கொரோனா தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இளம் வயதில் பலர் மரணம் அடைவதற்கு மரபியல் நோய், வாழ்க்கை முறை மாற்றங்கள், இணை நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.