ADDED : ஜூன் 01, 2025 03:30 AM

புதுடில்லி: கேரளா, கர்நாடக மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3,400 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று சமீபகாலமாக ஆசிய நாடுகளான தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியாவில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நம் நாட்டிலும் கடந்த இரு வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 26ம் தேதி, நாட்டில் 1,010 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் வரை 3,400 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நான்கு நாட்களில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கேரளாவில் 1,336; மஹாராஷ்டிராவில் 467; டில்லியில் 375; குஜராத்தில் 265; பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 234 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 205 பேருக்கும் பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவுக்கு ஏழு பேர் பலியாகியுள்ளனர். இதில் ஆறு பேர் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால், பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடகா அரசு, பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளது.
சமீபகாலமாக பரவி வரும் தொற்றால், பாதிப்பு அதிகமாக இல்லை என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணியும்படி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். புற்றுநோய், இதயநோய் போன்ற இணை நோய் உடையவர்கள், காய்ச்சல், இருமல், தலைவலி வந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி பரிசோதித்து, தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.