வரி ஏய்ப்பில் ஈடுபட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு... சிக்கல்!: போலி அறக்கட்டளைகளுக்கு சி.எஸ்.ஆர்., நிதி வழங்கி மோசடி
வரி ஏய்ப்பில் ஈடுபட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு... சிக்கல்!: போலி அறக்கட்டளைகளுக்கு சி.எஸ்.ஆர்., நிதி வழங்கி மோசடி
ADDED : ஆக 17, 2025 12:42 AM

புதுடில்லி: சமூக மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்படும் சி.எஸ்.ஆர்., நிதியை, போலி அறக்கட்டளைகளுக்கு வழங்கி, மீண்டும் பல்வேறு பண பரிவர்த்தனைகள் வாயிலாக அதே நிதியை வருமானமாக பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்று, பண மோசடியில் ஈடுபட்டு வருவது, வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் நிகர லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சமூக மேம்பாட்டு பணிகளுக்காக செலவிடும் வகையில், சி.எஸ்.ஆர்., எனப்படும் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய நிறுவனங்கள் சட்டம், 2013-ன் படி, கடந்த 2014ல் ஏப்ரல் 1ம் தேதி இது அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் வாயிலாக கார்ப்பரேட் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்., நடவடிக்கைகளில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சமூக பிரச்னை இதன்படி நிறுவனங்கள், தங்கள் லாபத்தில் 2 சதவீதம் வரை சி.எஸ்.ஆர்., நிதிக்கு பயன் படுத்த இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு போன்ற பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண, இந்த நிதி பயன்படுத்த வேண்டும்.
லாபம் ஈட்டுவதோடு மட்டுமின்றி, சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் வகையில், நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், நிறுவனங்கள் ஒதுக்கும் சி.எஸ்.ஆர்., நிதியில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, நிதியை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லாததுடன், திட்டங்களை முறையாக செயல்படுத்துவது இல்லை உள்ளிட்ட புகார்கள் சமீபகாலமாக அதிகளவு எழுந்துள்ளன.
இப்புகார்களின் மீது வருமான வரித்துறை அதிகாரிகள், சமீபத்தில் டில்லியில் சோதனை நடத்தினர். இதில், நிறுவனங்கள் சி.எஸ்.ஆர்., நிதியைப் பெற்றதாக கூறப்படும் அறக்கட்டளைகளில், 1,112 போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
குற்றச்சாட்டுகள் இந்த மோசடி, கம்பெனிகள் சட்டம் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் சில பிரிவுகளில் உள்ள ஓட்டைகளைப் பயன் படுத்தி, அரங்கேற்றப் படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ், தேசிய சி.எஸ்.ஆர்., இணையதளத்தின்படி, 2014 - 15 முதல் 2021 - 22 நிதியாண்டு வரையில், 1.53 லட்சம் கோடி ரூபாய் சி.எஸ்.ஆர்., நிதியாக செலவிடப்பட்டுள்ளன. இதுவே, 2023 - -24 நிதியாண்டில் 27,188 நிறுவனங்கள் மொத்தம் 34,908 கோடி ரூபாயை சி.எஸ்.ஆர்., நிதியாக செலவிட்டுள்ளன.
ஆனால், போலி அறக்கட்டளைகள் வாயிலாக, இந்த நிதி மீண்டும் நிறுவனங்களுக்கே கிடைக்கிறது. இதில் வரி ஏய்ப்புடன், வரிச் சலுகையும் போலியாக பயன்படுத்தப்படுகிறது.
நடவடிக்கை இதையடுத்து, போலி அறக்கட்டளைகளுடன் தொடர்புடைய கார்ப்பரேட் நிறுவனங்களின் விபரங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்து வருவதுடன், பண மோசடி புகாரின்படி அந்த அறக்கட்டளைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
டில்லி மட்டுமின்றி, நம் நாட்டின் மற்ற பெருநகரங்களிலும் இதுபோன்ற மோசடியை கார்ப்பரேட் நிறுவனங்கள் அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
எனவே, மற்ற பகுதிகளிலும், போலி அறக்கட்டளைகளை கண்டறிந்து, அதனுடன் தொடர்புடைய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.