ADDED : ஜன 12, 2024 11:26 PM
பெங்களூரு: கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத 18,886 கடைக்காரர்களுக்கு, பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது.
கர்நாடகாவில் அனைத்து வணிகக் கடைகளிலும், கன்னடத்தில் பெயர் பலகை வைக்க வேண்டும் என, கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக நடத்திய ஊர்வலத்தின்போது, கடைகளில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை அடித்து, நொறுக்கினர்.
முன்னதாக கர்நாடகாவில் உள்ள கடைகளில், பெயர் பலகையை 60 சதவீதம் கன்னடத்தில் வைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு இருந்தது. பிப்ரவரி வரை கடைகளின் உரிமையாளர்களுக்கு, அரசு கெடு விதித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் ஆங்கிலத்தில் பெயர் பலகை பொருத்தப்பட்டு இருக்கும், கடைகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.அதன்படி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கமிஷனரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதில் 18,886 கடைகளில் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து கன்னடத்தில் பெயர் பலகை வைக்கும்படியும், இதுவரை ஏன் வைக்கவில்லை என்று விளக்கம் கேட்டும், 18,886 கடை உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
கன்னடத்தில் பெயர் பலகை வைக்காவிட்டால், கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக, மாநகராட்சி முதன்மை சுகாதார அதிகாரி சையது சிராஜ் கூறி உள்ளார்.