ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அதிகாரம்
ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அதிகாரம்
ADDED : மே 08, 2025 10:54 PM
“தேசிய தலைநகரில் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மற்றும் பிற துறைகளின் முக்கிய அதிகாரிகளுக்கு முதன் முறையாக மாநில அரசு அதிகாரம் அளித்துள்ளது,” என, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்தார்.
டில்லியில் ஒலி மாசு, காற்று மாசுபாட்டுக்கு நிகராக மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தியது.
இந்த பிரச்னை குறித்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா நேற்று கூறியதாவது:
ஒலி மாசுபாடு புகார்கள் தொடர்பாக இதுவரை வருவாய்த் துறை, டில்லி காவல்துறை, டில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகள் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இதனால் ஒலிமாசுபாட்டு பிரச்னைக்கு தீர்வு எட்ட முடியவில்லை.
அரசின் புதிய முடிவால் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் உதவி ஆணையர்கள், அனைத்து வருவாய் துணை ஆணையர்கள், துணைப்பிரிவு கலெக்டர்கள், கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து, ரயில்வே, விமான நிலையங்கள் காவல் உதவி ஆணையர்கள், டில்லி மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் மூத்த சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அதிகாரிகள், ஒலிமாசுபாடு எழுப்பும் இடங்களை ஆய்வு செய்யலாம். அறிவிப்புகளை வெளியிடலாம், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒலி மாசுபாடு உருவாக்குபவர்கள் மீது வழக்குத் தொடரலாம்.
இந்த அறிவிப்பின் வாயிலாக முந்தைய திருத்தப்பட்ட 2001, 2008ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட உத்தரவுகள் திருத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

