ஊழலற்ற ஆட்சி தொடரும்: மோடி உறுதி பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேச்சு
ஊழலற்ற ஆட்சி தொடரும்: மோடி உறுதி பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேச்சு
ADDED : பிப் 18, 2024 01:21 AM

''கடந்த 10 ஆண்டு களில் இருந்ததைப் போன்று, ஊழல் இல்லாத ஆட்சி தொடரும். வரும் லோக்சபா தேர்தலில் தாமரை சின்னம் தான், பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்,'' என, பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்து உள்ளார்.
லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டில்லியில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில், நாடு முழுதும் இருந்து, 11,000த்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
சாதனை
நேற்று துவங்கிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
வரும் லோக்சபா தேர்த லில், பா.ஜ., குறைந்தபட்சம் 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். இதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், முந்தைய தேர்தலைவிட பா.ஜ.,வுக்கு கூடுதலாக, குறைந்தபட்சம், 370 ஓட்டுகள் பதிவாவதை கட்சி நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.
பா.ஜ.,வுக்கான இலக்கு, 370 தொகுதிகள். இது வெறும் எண்ணிக்கை அல்ல. அது, பாரதிய ஜன சங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாகத்துக்கு நாம் செலுத்தும் காணிக்கை, மரியாதை, அஞ்சலியாகும்.
முதன்முறை வாக்காளர்கள், இளைஞர்கள், பெண்களின் ஓட்டுகளை பெறுவதற்கான முயற்சிகளில் முழுமனதுடன் அனைவரும் ஈடுபட வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளை மக்களிடையே எடுத்துச் செல்லுங்கள்.
குறிப்பாக, ஊழல் இல்லாத நிர்வாகத்தை குறிப்பிடவும். இது தொடரும் என்றும் மக்களிடையே தெரிவிக்கவும். தேர்தல் நெருங்கும் நேரத்தில், மக்களின் உணர்வுகளை துாண்டும் வகையில், எதிர்க்கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபடும். அதை நாம் முறியடிக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகள், நாட்டில் ஏற்பட்டுள்ள உட்கட்டமைப்பு மறுமலர்ச்சி, உலகளவில் நம் நாட்டின் மரியாதை உயர்வு உள்ளிட்டவற்றை தெரிவிக்க வேண்டும்.
வரும் லோக்சபா தேர்தலில் தாமரை சின்னம் தான், பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர். இதை உணர்ந்து, அனைவரும் தேர்தல்பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தீர்மானங்கள்
ராமர் கோவில் கட்டியது மற்றும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதற்காக பிரதமரை பாராட்டி, பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொருளாதார வளர்ச்சி தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோது, தமிழ் மற்றும் தெலுங்கில் பேசும்படி, பிரதமர்அவரை அறிவுறுத்தினார். இதையடுத்து, அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பேசினார்.
மத்திய அமைச்சர்முருகன் பேசுகையில்,''பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தென் மாநிலங்களில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. உண்மையான தேசிய கட்சி பா.ஜ., தான்.தமிழகம், தெலுங்கானாவிலும் பா.ஜ.,வுக்குஎம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்,'' என்றார்.
''விவசாயிகள் நலனுக்காக பிரதமர் மோடி பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். உண்மையில் விவசாயிகளை, தன் குடும்ப உறுப்பினர்களாக பிரதமர் பார்க்கிறார்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குறிப்பிட்டார்.
- நமது சிறப்பு நிருபர் -