UPDATED : ஏப் 20, 2024 01:47 PM
ADDED : ஏப் 20, 2024 01:29 PM

புதுடில்லி: ‛‛ ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி? நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தம் விநியோகம் செய்வது எப்படி ? என பிரதமர் மோடி பாடம் நடத்தி வருகிறார்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் ‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி, நாட்டில் ஊழல் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு ‛முழு ஊழல் அறிவியல்' என்ற பாடத்தின் கீழ், ‛நன்கொடை வியாபாரம்' உட்பட ஒவ்வொரு அத்யாயத்தையும் அவரே விரிவாக கற்பிக்கிறார்.
அதில், ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?
நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தம் விநியோகம் செய்வது எப்படி?
ஊழவ்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங்மெஷின் எப்படி செயல்படுகிறது?
விசாரணை அமைப்புகளை பறிக்கும் முகவர்களாக்குவதன் மூலம் ‛ பெயில் மற்றும் சிறை' விளையாட்டை எப்படி விளையாடுவது என்பது குறித்து பாடம் நடத்தப்படுகிறது.
ஊழல்வாதிகளின் கூடாரமாகி உள்ள பா.ஜ., அதன் தலைவர்களுக்கு இந்த பாடங்களை கட்டாயமாக்கி இருக்கிறது. அதற்கான கட்டணத்தை நாடு செலுத்துகிறது. ‛ இண்டியா' கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும், இந்த பள்ளியை மூடுவதுடன், இந்த பாடங்களை ரத்து செய்யும்.

