'ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது' தெலுங்கானாவில் பிரதமர் உறுதி
'ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது' தெலுங்கானாவில் பிரதமர் உறுதி
ADDED : மார் 17, 2024 01:03 AM

ஹைதராபாத் : ''காங்கிரஸ் - பாரத் ராஷ்ட்ர சமிதி ஆகியவை, ஊழலின் கூட்டாளிகள். எந்த ஊழல்வாதியும் தப்பிக்க முடியாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, நாகர்குர்னுார் மாவட்டத்தில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
காங்., மற்றும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிகள் இணைந்து, தெலுங்கானாவின் வளர்ச்சியை தடுத்து வருகின்றன.
மாநிலத்தை தாண்டி, ஊழலில் திளைக்கும் கட்சியுடன், பாரத் ராஷ்ட்ர சமிதி கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்துள்ளது. அக்கட்சியின் உண்மையான முகம் தற்போது வெளி வந்துள்ளது.
எந்த ஒரு ஊழல்வாதியும் தப்பிக்க முடியாது என, தெலுங்கானா மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். வாரிசு கட்சிகளான காங்., - பாரத் ராஷ்ட்ர சமிதி ஆகியவை ஊழலின் கூட்டாளிகள்.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலை, காங்., செய்த நிலையில், நீர்ப்பாசன திட்டங்களில் பாரத் ராஷ்ட்ர சமிதி முறைகேடு செய்தது.
இந்த இரு கட்சிகளுக்கும் தெலுங்கானா மக்கள் மீது அக்கறை இல்லை. கொள்ளை அடிக்க வேண்டும்; வாரிசுகளுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பது தான் அக்கட்சிகளின் ஒரே நோக்கம்.
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் 'தாமரை' சின்னத்துக்கு ஓட்டளித்து, இந்த கட்சிகளுக்கு வாக்காளர்களாகிய நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.

