இருமல் மருந்து சர்ச்சை: தமிழக அரசு ஒத்துழைப்பில்லை என்கிறார் ம.பி முதல்வர்
இருமல் மருந்து சர்ச்சை: தமிழக அரசு ஒத்துழைப்பில்லை என்கிறார் ம.பி முதல்வர்
UPDATED : அக் 09, 2025 08:06 PM
ADDED : அக் 09, 2025 08:02 PM

நாக்பூர்: இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், 1 முதல் 7 வயது வரை உள்ள 21 குழந்தைகள், அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தனர்.
இதற்கு குறித்து மத்திய பிரதேச அரசு விசாரித்ததில் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் 'ஸ்ரீசன் பார்மா' என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்டரிப்' இருமல் மருந்து, வேறு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 'நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.' மருந்துகள் காரணம் என்று தெரியவந்தது.
இதற்கிடையில், பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. நேற்று முதல் இன்று இடைப்பட்ட இரவில், சிந்த்வாராவின் உம்ரேத் தாலுகாவில் உள்ள பச்தார் கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் மயங்க் சூர்யவன்ஷி சிகிச்சையின் போது உயிரிழந்தான். செப்டம்பர் 25 முதல் அந்த சிறுவன் நாக்பூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான்.
இதனையடுத்து 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து உட்கொண்டதைத் தொடர்ந்து நாக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையைப் பார்வையிட மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இன்று மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு வந்தார்.
நாக்பூரில் மோகன் யாதவ் அளித்த பேட்டி:
இங்குள்ள மருத்துவமனைக்கு சென்று இருமல் மருந்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்வையிட்டேன். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்தேன் மருத்துவர்களுடன் பேசினேன். தொடர்ச்சியான சிகிச்சைக்கு அரசு உறுதியாக இருக்கும்.
மருந்துக் கட்டுப்பாட்டாளர் அங்கு காணப்படும் தரமற்ற மருந்தை முழுமையாக விசாரித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்,
மருந்து நிறுவனங்கள் எங்கு அமைந்திருந்தாலும், மருந்துகளுக்கான இறுதிப் பொறுப்பு அவர்களிடம் உள்ளது என்பது உண்மைதான். இருப்பினும், எங்கள் இடத்திலிருந்து ஒரு சீரற்ற மாதிரியை நாங்கள் இன்னும் எடுத்தோம். இந்த விவகாரத்தில் தொடர்புள்ளவர்களை சஸ்பெண்ட் செய்தோம்.
இந்த விவகாரத்தில் நடந்து வரும் விசாரணையில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை.
இவ்வாறு மோகன் யாதவ் கூறினார்.
தமிழக அரசு பதில்:
தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
டைஎத்திலீன் கிளைகோல் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மாநில அரசு உடனடியாக செயல்பட்டு தடை விதித்தது. மாநில அரசு, மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சோதனை குறித்து, மத்திய அரசும் மத்தியப் பிரதேச அரசும் சோதனைகளை நடத்தி, ஆரம்பத்தில் மருந்தில் எந்தத் தவறும் இல்லை என்று தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாத இரண்டு மூத்த மருந்து ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை அரசியலாக்கவோ அல்லது ஊடகங்களில் மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்தவோ கூடாது.
இதைப் பற்றி ஒவ்வொரு நாளும் பேசுவதன் மூலம் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.