ADDED : ஜன 24, 2025 07:03 AM

அதிநவீன வாழ்க்கை தரம் மற்றும் விளையாட்டுகளுக்கு இடையே, உள்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகள் மாயமாகின்றன. நம் நாட்டு விளையாட்டு போட்டிகளை நடத்தும் நோக்கில், கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் ஒருவர், தன் சொந்த பணத்தை செலவிட்டு குஸ்தி மைதானம் அமைத்துள்ளார்.
கிரிக்கெட், பேட்மின்டன், கால்பந்து போன்ற புதிய விளையாட்டுகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், நம் நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, குஸ்தி, கோகோ போட்டிகளுக்கு கிடைப்பதில்லை. இதை வளர்ப்பதில் உள்ளாட்சி கவுன்சிலர் ஒருவர் ஆர்வம் காட்டுகிறார்.
விஜயபுரா, சடசனா பட்டண பஞ்சாயத்து கவுன்சிலர் ஸ்ரீகாந்த் குன்டகல்லி. இவர் சிறந்த குஸ்தி வீரர். பல போட்டிகளில் பங்கேற்று கோப்பை வென்றவர். இந்த வீரக்கலை நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதை கண்டு வருத்தமடைந்த அவர், குஸ்தியை வளர்க்க முடிவு செய்தார்.
தன் சொந்த பணம் 5 லட்சத்தை செலவிட்டு, சடசனாவில் குஸ்தி மைதானம் அமைத்துள்ளார். இதில் கோ கோ, கபடி, குஸ்தி போன்ற உள்நாட்டு விளையாட்டுகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அங்குள்ள சங்கமேஸ்வரா கோவில் முன் பகுதியில், 55 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள குஸ்தி மைதானத்தில், ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து, விளையாட்டு போட்டிகளை ரசிக்கலாம்
இம்மாதம் இறுதி வாரத்தில் நடக்கவுள்ள சங்கமேஸ்வரா திருவிழாவில், குஸ்தி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஸ்ரீகாந்த் குன்டகல்லி கூறியதாவது:
ஆயுதங்கள் இல்லாமல் எதிராளியுடன் மோதி, வெற்றி பெறும் வீர விளையாட்டு குஸ்தி. இதில் நபரின் உடற் திறன், புத்தி கூர்மையை வெளிப்படுத்தலாம்.
இந்தியாவில் குஸ்தி புராதனமான விளையாட்டு ஆகும். புராணங்களிலும் குஸ்தி இடம் பெற்றுள்ளது.
புராதன வீர விளையாட்டுகளை வளர்த்து, பாதுகாப்பது நமது கடமையாகும். கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான குஸ்தி வீரர்கள் உள்ளனர்.
இவர்கள் பயிற்சி பெற வசதியாக, மைதானம் அமைத்துள்ளேன். இங்கு குஸ்தி மட்டுமின்றி, கபடி, கோகோ உட்பட, பல்வேறு புராதன விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும். அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளித்தால், போட்டிகள் ஏற்பாடு செய்ய உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.

