UPDATED : ஜூன் 04, 2024 08:01 AM
ADDED : ஜூன் 04, 2024 05:22 AM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை எட்டு மணிக்கு துவங்கியது. நாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுதும் கடந்த ஒன்றரை மாதமாக ஏழு கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் 543 தொகுதிகளில், தங்களுடைய எம்.பி.,யாக மக்கள் யாரை தேர்வு செய்துள்ளனர் என்பது இன்று தெரிய வரும். காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதனைத்தொடர்ந்து முன்னிலை நிலவரம் தெரிய வரும் என்பதால், கட்சிகள் கொண்டாட துவங்கிவிடும். இன்று பகல் 12:00 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.
பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தால், ஜவஹர்லால் நேருவுக்குப் பின், தன் கட்சியை தொடர்ந்து மூன்று தேர்தலில் வெற்றி பீடத்தில் நிறுத்திய பெருமை பிரதமர் மோடிக்கு கிடைக்கும். இந்த தேர்தல் தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சிகளின் இருப்பு, செல்வாக்கு, வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடியதாக அமைய உள்ளது. தமிழகம், கேரளா போன்ற தென் மாநிலங்களிலும், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற கிழக்கு மாநிலங்களிலும், பா.ஜ., தன் இருப்பை விரிவுபடுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.