UPDATED : மார் 19, 2024 03:33 PM
ADDED : மார் 19, 2024 12:42 PM

புதுடில்லி: ‛‛ நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் நிர்வாகிகள் எடுத்துச் செல்ல வேண்டும் '' என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது: நாடு மாற்றத்தை எதிர்பார்த்து கொண்டுள்ளது. தற்போதைய அரசுக் கூறும் ‛ கியாரண்டி' என்ற வார்த்தை 2004ல் அப்போதைய அரசு கூறிய ‛ இந்தியா மிளிர்கிறது ' என்பதைப் போல் உள்ளது.
நமது தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவும், நமது வாக்குறுதிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லப்படுவதையும் நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். நகரங்கள், கிராமங்களில் வசிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் தேர்தல் அறிக்கையை கொண்டு செல்ல வேண்டும். அதில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இவ்வாறு கார்கே பேசினார்.

