ADDED : அக் 27, 2024 11:01 PM

சிறார்களுக்கு பள்ளிகள் திறப்பது சகஜம். ஆனால் மாண்டியாவில் விவசாயிகளுக்காக பள்ளி திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக துவங்கப்பட்ட, நாட்டின் முதல் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இளைஞர்களுக்கு, விவசாயத்தில் நாட்டம் குறைகிறது. பிழைப்பு தேடி நகர்ப்பகுதிகளுக்கு, புலம் பெயர்கின்றனர். இதை கருத்தில் கொண்டு விவசாயத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், மாண்டியாவில் விவசாய பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
மாண்டியாவின், ஆலகெரே கிராமத்தில் இளைஞர்கள், வேறு இடங்களுக்கு பிழைக்கச் செல்வதைத் தடுக்கவும், படித்தவர்களை விவசாயத்திற்கு ஈர்க்கும் நோக்கிலும, விவசாய பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றும் சத்திய மூர்த்தி தலைமையில், ஏழு பேர் அடங்கிய குழுவினர், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்த பள்ளியைத் திறந்துள்ளனர்.
இதுதொடர்பாக, பேராசிரியர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
விவசாயத்தை லாபகரமாக்குவது, விவசாயிகள் யாரையும் சார்ந்திராமல் வாழ வழி வகுப்பது, அவர்கள் பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு, புலம் பெயர்வதை தடுப்பது, தங்கள் நிலத்தை விவசாயிகள் விற்பதை தடுப்பதும், பள்ளியின் நோக்கமாகும். இது அவர்களுக்கு உதவியாக உள்ளது.
விவசாய வல்லுனர்கள், முற்போக்கு விவசாயிகள் மூலம் உதவி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு கல்வி அளிப்பதுடன், பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. விவசாய பள்ளியில் வல்லுனர்கள் மூலமாக கருத்தரங்கு நடத்தப்படும்.
இஸ்ரேல் உட்பட, வெவ்வேறு நாடுகளின் விவசாயிகளின் வெற்றிக்கதைகள் திரையில் காட்டப்படும். மாநிலம் முழுதும் இதுபோன்ற பல பள்ளிகள் திறப்பதற்கு ஆலோசிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.