UPDATED : பிப் 25, 2024 06:39 PM
ADDED : பிப் 25, 2024 10:35 AM
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் துவாரகையில் பகவான் கிருஷ்ணர் கால நகரம் கடலில் பிரதமர் மோடி, நீருக்குள் மூழ்கி பிரார்த்தனையில் ஈடுபட்டார். குஜராத்தில் அமைந்துள்ள நாட்டின் மிக நீளமான 'சுதர்ஷன் சேது' கேபிள் பாலத்தை ரிப்பன் வெட்டி பிரதமர் மோடி திறந்து வைத்தார். பாலத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
* ஓகா மற்றும் பெய்ட் துவாரகா தீவை இணைக்கும் 'சுதர்ஷன் சேது' பாலம் ரூ.979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
* 2.3 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்திற்கு 2017 அக்டோபர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

* சுதர்சன் சேது பாலம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பாலத்தின் நடைபாதை பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் உள்ளன.
* நடைபாதையின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


மகிழ்ச்சி அடைகிறேன்
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி, '' நாட்டின் மிக நீளமான 'சுதர்ஷன் சேது' கேபிள் பாலத்தை இன்று திறந்து வைத்ததால், மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டின் சான்று'' என பதிவிட்டுள்ளார்.
கடலுக்குள் மூழ்கி பிரார்த்தித்த மோடி
குஜராத் மாநிலம் துவாரகையில் பகவான் கிருஷ்ணர் கால நகரம் கடலில் மூழ்கியுள்ளது. அங்கு பிரதமர் மோடி, நீருக்குள் மூழ்கி பிரார்த்தனையில் ஈடுபட்டார். இது எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது.
ஆன்மிக மகத்துவம் மற்றும் காலமற்ற பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வழிபாடு
முன்னதாக, புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார்.

