ADDED : நவ 08, 2024 10:55 PM
ஜெயநகர்: தியேட்டர் உரிமையாளரின் கை, கால்களை கட்டி போட்டு நகை, பணம் கொள்ளை அடித்த வேலைக்கார தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு, மல்லேஸ்வரம் சம்பிகே சாலையில் உள்ள சம்பிகே தியேட்டரின் உரிமையாளர் நாகேஷ். இவரது வீடு ஜெயநகரில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகேஷ் வீட்டில், நேபாளத்தை சேர்ந்த கணேஷ், கீதா தம்பதி வீட்டு வேலை செய்தனர்.
கடந்த 2ம் தேதி, வீட்டில் நாகேஷ் மட்டும் தனியாக இருந்தார். அவரது கை, கால்களை கட்டிபோட்ட தம்பதி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம், 1 கிலோ தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
வெளியே சென்றிருந்த குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பினர். கை, கால்கள் கட்டப்பட்ட நாகேஷை மீட்டனர். கொள்ளை சம்பவம் குறித்து ஜெயநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் விசாரித்தனர்.
இந்நிலையில், மொபைல் போன் டவரை வைத்து, மும்பையில் இருந்த கணேஷ், கீதாவை ஜெயநகர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.