ADDED : நவ 11, 2024 05:21 AM

பெங்களூரு: வாடகைக்கு வீடு கேட்பது போன்று நடித்து, கொலை, கொள்ளையில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு, மாதநாயகனஹள்ளியின், லட்சுமிபுராவில் வசித்தவர் பாக்யம்மா, 70. கடந்த பிப்., 13ல், இவர் கொலை செய்யப்பட்டு, தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து, மத்திய மண்டல ஐ.ஜி.பி., லாபுராமின் உத்தரவுப்படி, தாவரகெரே இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் விசாரணையில் இறங்கினர். ஹொஸ்கோட் அருகில் ஜீவா, 30, இவரது மனைவி ஆஷா, 30, ஆகியோரை நேற்று அதிகாலை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 240 கிராம் தங்க நகைகள், 900 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹொஸ்கோட்டில் வசிக்கும் ஜீவா, பேக்கரியில் தின்பண்டங்கள் தயாரிக்கும் வேலை செய்து வந்தார்.
அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில், தம்பதி கொள்ளை அடிப்பதில் ஈடுபட்டனர்.
ஆஷா அந்தந்த பகுதிகளில் சுற்றி திரிந்து, பெண்கள் தனியாக வசிக்கும் வீடுகளை நோட்டம் விடுவார்.
அதன்பின் தம்பதி வாடகைக்கு வீடு கேட்பது போன்று, அந்த வீடுகளுக்கு சென்று, அங்குள்ள பெண்ணை தாக்கிவிட்டு, தங்க நகைகள், பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடுவது விசாரணையில் தெரிய வந்தது. அதேபோன்று, லட்சுமிபுராவிலும் மூதாட்டியை தாக்கி கொலை செய்து, உடலை தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டு, தப்பியதை ஒப்புக்கொண்டனர்.
கொலை, கொள்ளை, கொலை முயற்சி தொடர்பாக, தம்பதி மீது 15 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.