தார்வாட் செல்ல வினய் குல்கர்னிக்கு ஐகோர்ட் மீண்டும் அனுமதி மறுப்பு
தார்வாட் செல்ல வினய் குல்கர்னிக்கு ஐகோர்ட் மீண்டும் அனுமதி மறுப்பு
ADDED : மார் 07, 2024 04:57 AM

பெங்களூரு : பா.ஜ., உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்., - எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தார்வாட் செல்ல, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
தார்வாடின் பா.ஜ., மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான யோகேஷ் கவுடா, 2016 ஜூன் 15ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்த கொலையில் தொடர்புடைய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னி உட்பட சிலரை கைது செய்தனர்.
மாதக்கணக்கில் சிறையில் இருந்த வினய் குல்கர்னிக்கு, கீழ்நிலை நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் ஆகியவை ஜாமின் மறுத்தன. அதன்பின் உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவர் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்பதால், தார்வாட் செல்ல அவருக்கு தடை விதித்தது. வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது.
வினய் குல்கர்னி, 2023 சட்டசபை தேர்தலில் தார்வாட் தொகுதியில், காங்., வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரசாரம் செய்ய, தார்வாடுக்கு செல்ல அனுமதி கேட்டார். நீதிமன்றம் நிராகரித்தது.
எனவே சமூக வலைதளம் மூலமாக பிரசாரம் செய்தார். இவரது மனைவி தார்வாட் சென்று, கணவருக்காக பிரசாரம் செய்தார். வினய் குல்கர்னி வெற்றி பெற்றார்.
அதன்பின் பல முறை தொகுதி பணிகளை கவனிக்க, தார்வாடுக்கு செல்ல அனுமதி கோரியும், அதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், 'மனுதாரர் மீது கொலை குற்றச்சாட்டு உள்ளது.
இவருக்கு ஜாமின் அளித்ததே அதிகம். இச்சூழ்நிலையில், அவர் தார்வாட் செல்ல நாங்கள் அனுமதி அளிக்க வேண்டுமா? தார்வாட் செல்ல அனுமதி பெறுவது குறித்து, உயர் நீதிமன்றத்தை நாடுங்கள்' என, காட்டமாக கூறியது.
'லோக்சபா தேர்தல் நெருங்குவதால், கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும். எனவே தார்வாட் செல்ல அனுமதிக்க வேண்டும்' எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வினய் குல்கர்னி, மனு தாக்கல் செய்தார்.
இதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், 'தார்வாட் செல்ல அனுமதி அளிக்க முடியாது' எனக் கூறி, அவரது மனுவை நேற்று தள்ளுபடி செய்தது.

