நீரவ் மோடியின் இரு சொகுசு கார்களை ஏலம் விட நீதிமன்றம் அனுமதி
நீரவ் மோடியின் இரு சொகுசு கார்களை ஏலம் விட நீதிமன்றம் அனுமதி
ADDED : நவ 22, 2025 05:27 PM

புதுடில்லி: வங்கி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் இரு சொகுசு கார்களை ஏலம் விட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498.20 கோடி கடனை பெற்று, அதனை திருப்ப செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பி சென்று விட்டார். பிறகு, சி.பி.ஐ., அளித்த புகாரின் பேரில், கடந்த 2019ம் ஆண்டு பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேண்ட்ஸ்வெர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது. நீரவ் மோடியை நாடு கடத்தவும் லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தனக்கு எதிராக கொலை முயற்சி நடப்பதாகக் கூறி, இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, நீரவ் மோடி 10 முறை தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, தன்னை நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீரவ் மோடி, பிரிட்டன் நீதிமன்றத்தில் மறுபடியும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நாளை (நவ.,23) விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், நீரவ் மோடியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரு சொகுசு கார்களை ஏலம் விடுவதற்கு அமலாக்கத்துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீரவ் மோடியிடம் இருந்து ஸ்கோடா சூப்பர்ப் எலிகண்ட் (மதிப்பு ரூ.7,50,000), மெர்சிடீஸ் பென்ஸ் 4மேடிக் எப்எல் 350 சிடிஐ (மதிப்பு ரூ.54,00,000) மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ் ஜிஎல்இ250 (மதிப்பு ரூ.39,00,000) ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ஒன்றை கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கார்களில் இரு கார்களை மட்டுமே ஏலம் விட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், கார் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிலையான வைப்புத்தொகையாக (FD) செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

