வாடகை தாய் வாயிலாக குழந்தை; முதிய தம்பதிக்கு கோர்ட் அனுமதி
வாடகை தாய் வாயிலாக குழந்தை; முதிய தம்பதிக்கு கோர்ட் அனுமதி
ADDED : டிச 09, 2024 05:06 AM

பெங்களூரு : முதிய தம்பதி, வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற, கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக மாநிலம், தாவணகெரேயில் 59 வயது கணவனும், 55 வயது மனைவியும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அதில் ஒருவர், 2002ல் சாலை விபத்தில் இறந்தார். மற்றொருவர், 2016ல் உடல்நலக் குறைவால் இறந்தார்.
இதனால், வயது மூப்பில் தங்களை பார்த்துக்கொள்ள மற்றுமொரு குழந்தை தேவை என தம்பதி கருதினர். வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற விரும்பி, வாடகைத்தாய் வாரியத்தை அணுகினர். வாரியமோ, வயதை காரணமாக காட்டி தம்பதியரின் விண்ணப்பத்தை ஏற்கவில்லை.
இதனால் தம்பதி, உயர் நீதிமன்றத்தை நாடினர். தங்களுக்கு வயதில் சலுகை வழங்கி, விந்து நன்கொடையாளர் வாயிலாக, வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற அனுமதிக்கும்படி வாரியத்துக்கு உத்தரவிடுமாறு கோரினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் கூறியதாவது:
தம்பதியின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. ஆயினும், தம்பதி மீண்டும் வாடகைத் தாய் வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு பெற்ற நான்கு வாரங்களுக்குள் தம்பதி, தகுதிச் சான்றிதழுக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும்.
விண்ணப்பித்த தம்பதியின் பரம்பரை, உடல், பொருளாதாரம் ஆகியவற்றை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட நான்கு வாரங்களுக்குள் வாரியம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார்.
வாடகைத்தாய் சட்டம்
வாடகைத்தாய் ஒழுங்கு முறை சட்டம் 2019ல் இயற்றப்பட்டது. இதன்படி வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற விரும்பும் தம்பதியில், அதிகபட்சமாக பெண்ணுக்கு 50 வயதுக்குள்ளும், ஆணுக்கு 55 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
யாருக்கு அனுமதி?
வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டப்படி, திருமணமான தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் அனுமதிக்கலாம். ஒரு விதவை அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு 35 - 45 வயதுக்குள் இருந்தால் அனுமதிக்கலாம்.
ஒரே பாலின தம்பதி, திருமணம் ஆகாத ஆண்கள் ஆகியோர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை.