கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனுக்கு ஐகோர்ட் ஜாமின்
கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனுக்கு ஐகோர்ட் ஜாமின்
UPDATED : ஜூன் 25, 2024 08:06 PM
ADDED : ஜூன் 25, 2024 07:57 PM

புனே: மஹாராஷ்டிராவில் சொகுசு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் 17 வயது சிறுவனுக்கு மும்பை ஐகோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
மஹாராஷடிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஷால் அகர்வால், புதிய போர்ஷோ ரக சொகுசு காரில் கடந்த 19-ம் தேதியன்று அதிகாலையில் புனே அருகே கல்யாணி நகர் பகுதியில் 200 கிமீ அசுர வேகத்தில் காரை ஓட்டிச்சென்ற போது எதிரே பைக்கில் வந்த அனிஸ் அவதியா, இவரது மனைவி அஷ்வினி கோஷ்தா என்ற தம்பதியினர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என தெரியவந்தது. சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
சிறுவனுக்கு கார் ஒட்ட அனுமதித்த குற்றத்திற்காக அவரது தந்தை விஷால் அகர்வாலை போலீசார் கைது செய்தனர். கடந்த 21-ம் தேதி அவருக்கு செஷன்ஸ் கோர்ட் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கில் 17 வயது சிறுவனுக்கு ஜாமின் வழங்கிட கோரி மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் சிறுவனக்கு ஜாமின் வழங்கினார்.