மசோதாக்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., ஆளும் மாநிலங்கள் வாதம்
மசோதாக்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., ஆளும் மாநிலங்கள் வாதம்
ADDED : ஆக 27, 2025 07:27 AM

'சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியாது. அந்த அதிகாரம், ஜனாதிபதி, கவர்னர் களுக்கு மட்டுமே உள்ளது' என, மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில், பா.ஜ., ஆளும் மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்துள்ளன.
சட்டசபைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
விசாரணை இந்த உத்தரவின் மீது, 14 கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி இருந்தார். இதை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
நான்காவது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது. அப்போது, பா.ஜ., ஆளும் மஹாராஷ்டிரா மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்:முதலில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க, கவர்னர் மறுப்பதற்கான சூழலை யாரும் வரையறுக்க முடியாது. அது, கவர்னரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
மேலும், இத்தகைய விவகாரங்களில் நீதித்துறை மறு ஆய்வு செய்வது என்பது, மறைமுகமானதாக தான் இருக்க வேண்டுமே தவிர நேரடியாக தலையிட முடியாது.மேலும், மத்திய அரசின் வரம்புக்குள் தான், மாநில அரசு மசோதாவை உருவாக்குகிறது என்றால், அரசியலமைப்பு பிரிவு 201ஐ பயன்படுத்தி, அதை கவர்னர், ஜனாதிபதி நிராகரிக்க அதிகாரம் இருக்கிறது.
அரசியல் சாசன பிரிவு 200ஐ தனியாக படிக்காமல், பிரிவு 254 உடன் சேர்த்து படிக்க வேண்டும். மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில், ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு இருக்கும் அதிகாரம் என்பது பிரத்யேகமானது. இவ்வாறு வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய், ''மசோதாவை கால வரம்பின்றி நிறுத்தி வைக்கும் போது, அதற்கான காரணத்தை நீதிமன்றம் கேட்க முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
ஒத்திவைப்பு
இதற்கு பதில் அளித்த மஹாராஷ்டிரா அரசு தரப்பு வழக்கறிஞர், 'நீதிமன்றங்கள் அவ்வாறு கேட்க முடியாது; மாறாக கவர்னர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று வேண்டுமானால் கேட்கலாம்.
'கவர்னர் நிபந்தனைக்கு உட்பட்டு செயல்பட்டாரா என, கோப்புகளை ஆராய்ந்து பார்க்க மட்டுமே நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. மாறாக அவர் என்ன முடிவு எடுத்தார்? ஏன் அந்த முடிவை எடுத்தார் என்ற விளக்கங்களை நீதிமன் றங்களால் கேட்க முடி யாது' என, பதிலளித்தார்.
மத்திய அரசுக்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங் வாதிடுகையில், ''எல்லா நோய்களுக்கும் உச்ச நீதிமன்றம் மட்டுமே மருந்தாக இருக்க முடியாது.
''சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்க ளுக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியாது. அந்த அதிகாரம், ஜனாதிபதி, கவர்னர்களுக்கு மட்டுமே உள்ளது,'' என்றார்.
ஹரியானா, கோவா உள்ளிட்ட பா.ஜ., ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர்களும், மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன் வைத்தனர். நேற்றைய அலுவல் நேரம் முடிந்ததையடுத்து, வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- டில்லி சிறப்பு நிருபர் -