சிறுமி பாலியல் வன்கொடுமை கோர்ட் குற்றச்சாட்டுகள் பதிவு
சிறுமி பாலியல் வன்கொடுமை கோர்ட் குற்றச்சாட்டுகள் பதிவு
ADDED : ஜன 09, 2025 10:00 PM
ரோஸ் அவென்யூ: சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தன் உறவினரால் ராஞ்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவளை வீட்டு வேலைக்காக டில்லிக்கு முகமது ஜும்ராத் என்ற பிரோஸ் அழைத்து வந்தார்.
தன் வீட்டில் சிறுமியை பிரோஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்காக சிறுமிக்கு பணம் தருவதாக பிரோஸ் வாக்குறுதி கொடுத்துள்ளார். தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த பிரோஸ், வீட்டு வேலை செய்ததற்கான சம்பளத்தையும் சிறுமிக்கு கொடுக்கவில்லை.
இதுகுறித்து 2022 ஜனவரி 29ல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை வேலைக்கு அழைத்து வர உதவிய தீபக் ஜெயின், முகமது ஜும்ராத் என்ற பிரோஸ், ரேணு டோரா ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மூவர் மீதும் கூடுதல் அமர்வு போக்சோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி சுஷீல் பாலா தாகர், குழந்தை ஊழியரை சுரண்டுவதற்காக ரேணு டோரா மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.
முகமது ஜும்ராத் மீது குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். போதுமான ஆதாரங்கள் இல்லாததை சுட்டிக்காட்டி தீபக் ஜெயினை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்தார்.
தன்னை தீபக் ஜெயின் பாலியல் வன்கொடுமை செய்யவில்லையென, நீதிபதி முன் ஆஜராகி பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்.

