சோனியா, ராகுலை நீதிமன்றம் விடுவிக்கவில்லை: பாஜ பதிலடி
சோனியா, ராகுலை நீதிமன்றம் விடுவிக்கவில்லை: பாஜ பதிலடி
UPDATED : டிச 16, 2025 10:36 PM
ADDED : டிச 16, 2025 10:32 PM

புதுடில்லி: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது என்பது ராகுல், சோனியாவை குற்றமற்றவர் என்ற சான்றிதழ் ஆகாது. அவர்களை விடுவிக்கவில்லை என பாஜ தெரிவித்துள்ளது.
'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் பார்லி., குழு காங்கிரஸ் தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றபத்திரிகையை டில்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கூறியதாவது: மத்திய விசாரணை முகமைகளை தவறாக பயன்படுத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது. ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் எதிரான சதி இது. ராகுல் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவருக்கு எதிராக இந்த சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜவின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாதது குற்றமற்றவர் என சான்றிதழ் அளித்தது ஆகாது. குற்றப்பத்திரிகை நிராகரிப்பு என்பது நடைமுறை சார்ந்தது. தகுதியின் அடிப்படையில் அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த கண்டுபிடிப்பும் இல்லை. நீதிமன்றம் குற்றமற்ற தன்மையையோ, பரிவர்த்தனைகளின் சட்டப்பூர்வத்தன்மையையோ அல்லது குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தையா ஆராயவில்லை. சோனியா குடும்பத்தினரையும் மற்றவர்களையும் குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுவிக்கவில்லை.
சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்த மோசடி, குற்றச்சதி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முதன்மை குற்றவியல் வழக்கு டில்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சோனியா மற்றும் ராகுலுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா கூறுகையில், சோனியா குடும்பத்தினர் இந்த வழக்கில் முழுமையாக குற்றம்சாட்டப்பட்டவர்கள். அவர்களுக்கு எந்த வகையிலும் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமலாக்கத்துறைக்கு பின்னடைவு அல்ல எனக்கூறினார்.

